ஒரு பனிப்படிந்த பைனாகுலர்

“ஒரு வருஷம் எப்படி போச்சுன்னே தெரில” என்று சொல்ல வாஞ்சை கொள்கிறது மனம். நிமிட முள்களுக்கு இடையில் இருக்கும் தொலைவை கடப்பதில் வியர்வை வழிய, மூச்சிரைக்க நின்று, நின்று நடந்தது இந்த சட்டைகளை ஈரத்தால் கனமாகி விடுகிறது. ஒவ்வொரு நிமிடமும் ஒரு வருடமாக தான் கடந்துகொண்டிருக்கிறது

 

அப்படி இந்த ஆண்டில் என்ன கிழித்துவிட்டோம் என்று சந்தோச தருணங்களையெல்லாம் எண்ணிப் பார்க்கையில் நான்கு விரல்கள் மீதம் வந்துவிட்டது. இந்த ஒட்டுமொத்த வெறுப்பிற்கும் ஒரு பெரிய வில்லன் தான் காரணம். அவன்/அவள் நான் பார்க்கும் சினிமா’க்களின் வில்லன் அல்ல. நான் பார்க்கும் சினிமாக்களில் பல வில்லன்கள் நான் விரும்பும் மனிதர்கள் என்ற பட்டியலில் அத்தியாவசியமாக விளங்குகின்றனர். என் வில்லனின் பெயரை நான் கூறிவிட்டால் நீங்கள் பர்சனல் கேள்விகள் கேட்க தொடங்கி விடுவீர்கள். நானும் practical-ஆக பதில் கூற வேண்டும் என்ற நிர்பந்தத்தில் பொய்கள் கூறும்படி ஆகிவிடலாம். நான் பொய்கள் கூறுவதில் இருந்து முற்றிலுமாக பின்வாங்க முயற்சித்து கொண்டு தான் இருக்கிறேன் என்றாலும், பொய்களை எழுதமாட்டேன்.

உண்மை நம்பர் ஒன்: உலகின் ஆதிப்பெரிய சோம்பேறி அடியேன் தான்.உண்மையாக எழுதப்படும் ஒவ்வொரு எழுத்தும் உலகின் உச்ச இலக்கியங்களை விட ஒரு படி மேல் என்று என் வில்லன் சில தருணங்களில் கூறி நான் கேட்டதுண்டு.

இரவுகளின் நீளம் விளங்க தொடங்கும்போது, தனிமை தான் முதல் புரிதல் ஆகிறது. தூக்கம் களைந்த நிலையிலும் எரிச்சலுடன் இருக்கும் கண்கள் எதையோ கேட்கிறது. சிரிக்க சில தருணங்கள், மறக்க சில தருணங்கள், பிய்த்தெடுத்த றெக்கைகளுடன் பறக்க சில தருணங்களை கொண்ட ஒரு திண்ணிய நாளை பொழுது! இதை நோக்கி தான் செல்கிறோமா? அர்த்தப்பட வேண்டியது தானே வாழ்க்கை? அது அடுத்த பாகம் என்ன நடக்கும் என்பதை பற்றி மட்டும் நினைக்கும் ஒரு பனிப்படிந்த பைனாகுலர் ஆனதில் ஒரு துளியும் களிப்பு இல்லை.

நிச்சயமாக மரபணு ரீதியாக வருவதில்லை எனது இளநரை என்பது புரிஞ்சாச்சு. மருத்துவர் ஸ்ட்ரெஸ் என்ற பொதுச்சொல்லை குறித்துவிட்டு என் 2017-ஐ மேலும் கனமாக்கிவிட்டார். 20 ஆண்டுகள் பழகிப்போன சென்னை தண்ணீரினால் இப்போது முடி கொட்டுவதும் தொடங்கிடுச்சு. அடி மீது அடி வாங்கி 2017-என்னும் அம்மியில் அரைக்கப்பட்ட, எந்த அளவுக்கு தனிமை விளங்கியதென்றால் நிம்மதியான உறக்கத்தில் இருந்து டாக்டர் சொன்ன ஸ்ட்ரெஸ்-ஐ விட்டு விலகி நிற்பதற்கு பதில் “சொன்ன சொல்லை தவற மாட்டான் இந்த கோட்டைசாமி என்று டயலாக் பேசிக்கொண்டு மேலும் சில காயங்களுடன் 2017-ஐ முடிக்க நினைக்கிறேன்.

சினிமாவை போல, எழுத்துக்களும் என்னை காக்க ஏதாவது முயற்சி எடுக்குமோ என்று அறிந்து கொள்வதில் ஒரு நப்பாசை.
என் எழுத்துக்கள் அர்த்தப்பட தொடங்கும்வரை எழுதிக்கொண்டே இருக்க விருப்பம். முடிவென முற்றுப்புள்ளி இடமால், இந்த தொடரை முடிக்க நான் இடும் அரைப்புள்ளியினால் அந்த பிழையை திருத்தவாவது மீண்டும் எழுத வருவேன் ,

TUESDAY, 26 DECEMBER 2017 அன்னிக்கு நைட் எழுதுனது.

என்னை தொடு வானமே!

Ennai Thodu Vaaname

அருகே உள்ள
அறைகளில் எல்லாம்
ஆதவன் நுழைந்துவிட்டான்.
நம் பாெழுதுகள்,
நம் அறைகளை மட்டும்
நிலவிடமே விட்டுவிட்டான்.

நிலவை மறந்த
பொய்களை எல்லாம்
காலை எரித்துவிட்டான்.
பொய்கள் கூறும்
கதைகளை மட்டும்
அறையின் வெளி இழுத்தான்.

விடியும் பொழுதில்
வடியா கண்ணீரில்
வானவில் மிளிரவிட்டான்.
இருளில் உளறும்
உண்மைகள் கேட்க
ஜன்னல்வழி கசிந்தான்.

நிலவை நேரில்
பார்த்த அவனோ
மேகம் அணிந்துவிட்டான்.
“இன்னொரு நாளா?”
விண்ணது வினவ
இயற்கை மறந்துவிட்டான்.

நம் விரல்கள் பிணக்க
குரல்கள் கனக்க
என்னை தொடு வானமே!